‘கினாப் பானா’… ‘கி. ப.’ அல்லது கிழக்குப் பல்கலைக்கழகம்…
- மட்டக்களப்பின் மணிமகுடம்…
- கிழக்கின் அறிவு ஜீவிகள் கொஞ்சி விளையாடும் கோகுலம்…
- வடக்குக் கிழக்குக்கு மனிதவளத்தை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்கென வழங்கும் உயர்கல்வித் தொழிற்சாலை…
- கிழக்கிலங்கையின் விஞ்ஞான ஆராய்ச்சித் தொழிற்பாடுகளின் ஊற்று…
இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டு போகவரவில்லை. அது ‘நம்மட அப்பா எண்டா மலையயே பிரட்டிருவாரு’… என்று தன் நண்பனை வெருட்டும் மூன்று வயதுக் குழந்தையின் கற்பனைக்கு ஒப்பானது. அக்குழந்தையின் அப்பா நிசத்தில் ‘மப்பு முறியாமல்’ சாக்கடையில் பிரண்டும் கிடக்கக் கூடும்’… அப்படிப்பட்ட நிசங்களின் வலிகள் (ironical realities) குழந்தை மனங்களுக்குத் தென்படுவதில்லை (தென்படவும் தேவையில்லை)! என்னைப் பொறுத்தவரையில் பாமரமக்கள் (அஃதாவது திருவாளர் போதுசனம்) குழந்தைகள் போன்றவர்கள் – பிறர் (அஃதாவது அரசியல்வாதிகள், நிர்வாகிகள், வெள்ளைக்கார தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற ‘பெரியவர்கள்’) காட்டும் படங்களுக்கெல்லாம் டப்பாங்கூத்து ஆடக்கூடியவர்கள்… அதுவும் மட்டக்களப்பின் திருவாளர் பொதுசனம் மிக மிக வெகுளித்தனமானது… இலகுவில் ஏமாற்றப்படக்கூடியது, கினாப் பானா தனக்கு நன்மை செய்யும் என இன்னமும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றது (இலவுகாத்த கிளியாக).
இந்தக் கல்விக்கூடம் (அதாவது கினாப் பானா) பற்றி நிறையவே எதிர்பார்ப்புகள் பலரிடமுண்டு. அது எமக்குக் கண்கூடாகத் தென்படுகின்றது. ஆனாலும், கினாப் பானா தம் எதிர்பார்ப்புக்களுக்கு அமையத் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை என்கின்ற ஆதங்கங்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு… இப்படியான ஆதங்கங்கள் தவமிருந்து பெற்ற தன் மகனோ மகளோ தன் எதிர்பார்ப்புக்கு அமைய வளர்ந்து வரவில்லை எனக் கலங்கும் தாய்படும் வேதனைக்கு நிகரானவை…
அப்படிப்பட்ட இரு ஆதங்கங்களை (எனதல்ல… பிறரின்…) இங்கு முன் வைக்கின்றேன்…
ஆதங்கம் #1: மயோன் முஸ்தபாவினது (2008ல் பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளிவிடப்பட்டது). மயோன் முஸ்தபாவின் சொல்வலிமையும் வன்மையும் நாம் அறிந்ததே. 2008களின் இறுதிக் காலகட்டங்களில் அவர் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இவ்வாறு கூறியிருந்தார்: (அஃதாவது, அவரின் கருத்துக்களின் சாராம்சத்தினை மட்டுமே நான் தருகின்றேன்).
ஆதங்கம் #2: பெயர் தெரியாத மீன்கருவாடு விற்கும் ஆச்சியொருவரினது (கருவாடு+ஆச்சி = கருவாட்டுஆச்சி = கருவாச்சி?) வெள்ளந்தியான கூற்று. இது 1996/7 காலப் பகுதிகளில், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குச் செல்லும் தனியார் பயணச் சேவை ஊர்தியில் சகபயணியான எனக்குக் கூறப்பட்டது.
“கிழக்கிலங்கையில் இருபெரும் பல்கலை உயர்கல்விக் கூடங்கள் உண்டு (அஃதாவது, கினாப் பானா மற்றும் தென் கினாப் பானா என்கின்ற தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய இரு நிறுவனங்கள்). கல்விப் பீடங்களில் (faculties) உரிய தரத்தை எட்டாத பீடாதிபதிகளையும், துறைத்தலைவர்களையும் நிர்வாகிகளாகக் கொண்டு, போதிய ஆராய்ச்சி அனுபவமோ, தகமைகளோ அற்ற விரிவுரையாளர்கள் அரை குறை ஆங்கிலத்தில் கற்பிக்கும் படம் காட்டல் (அல்லது பம்மாத்துக் காட்டல்) இந்நிறுவனங்களில் நடை பெறுகிறது. இந்நிறுவனங்களில் கற்பிக்கும் பெரும்பான்மையான விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் கற்பிப்பதற்குப் போதுமான அறிவு மற்றும் அனுபவம் அற்றவர்கள்! அரைகுறை ஆங்கிலத்தில் வெந்தும் வேகாததுமாக வழங்கப்படும் விஞ்ஞானக் கல்விகற்றுப் பட்டம் பெறுவோர் நிலைதான் என்ன? இப்படியாயின், கிழக்கிலங்கையின் எதிர்காலம் எவ்வாறு சுபீட்சமானதாக மலரும்”…? - இவ்வாறு மயோன் முஸ்தபா தனக்கே உரியதான பாணியில் கேட்டிருந்தார். (சுருங்கக் கூறின், ‘பரமார்த்தகுருத்தனமான’ நடவடிக்கைகள் உருவாக்குகின்ற சீடர்களான பட்டதாரிகளால் குறிப்பிடத்தக்கதான பயனொன்றுமில்லை என்பதுவே மயோன் முஸ்தபாவின் கருத்தாகின்றது).
இதுவல்லவோ கேள்வி! கினாப் பானாக்கெதிரான காத்திரமான சாடல் இது… என்றெல்லாம் எண்ணவே வேண்டாம். அடியேனின் பார்வையில் மயோன் முஸ்தபாவின் சாடலானது மிக மிகச் சைவமானது… ஒரு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்புள்ள அரசியல்வாதியின் நியாயமான ஆதங்கமது!
அப்படியாயின் கினாப் பானாவுக்கெதிரான அசைவச் சாடல் எப்படியிருக்கும்?
கச்சான் காற்று சுழற்றியடிக்கும் ஆகஸ்டுமாதம் (1996 அல்லது 1997 ஆண்டு எனக் கொள்க)… வாழைச்சேனையில் இருந்து செங்கலடியூடாக மட்டக்களப்பு நகர் நோக்கிச் செல்லும் தனியார் பயண ஊர்தியில் வந்தாறுமூலையில் அடியேன் தொத்தியேறினேன். வியர்வைக் கசகசப்பும், சனவெக்கையும் புழுதியும் கலந்து எழுந்த மணம் அடிமட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்தியடையாத மூன்றாமுலகத்திற்கு மட்டுமே உரியது என்பது எனக்கு விளங்கத்தொடங்கியிருந்த காலமது. நெருக்கியடித்து எப்படியோ ஒரு இருக்கையைக் கைப்பற்றிக்கொண்டு பெருமூச்சு விட்டபோது, மிச்சம் சொச்சமுள்ள காவிப்பற்களினைக்காட்டி அருகிலிருந்த ஆச்சியொன்று சிரித்தது. கள்ளம் கபடமற்ற அதி-பாமரத்தனமான புன்னகையது. அதன்முன் டாவின்சி வரைந்த மோனாலீசாவின் புன்னகையெல்லாம் நிச்சயமாகத்தோற்றுப் போய்விடும்… அப்படியான உள்ளத்தையுருக்கும் மோனப்புன்னகை… ஆச்சியின் பக்கத்தில் கருவாட்டுக்கூடை, மட்டக்களப்புப் பெரிய சந்தை நோக்கிய பயணம். தள்ளாதவயதிலும், அயராது உழைக்கும் உழைப்பபாளிக்கான கம்பீரமும் பணிவும் சேர்ந்த தோற்றம் ஆச்சியினது.
‘என்ன கிளி, கெம்பசில இருந்தா வாறா? என்ட பேரனுந்தான் இஞ்ச படிக்காரு… புதுசாச் சேந்த புள்ளகள செரியாப் போட்டு ரேகிங் ரேகிங் எண்டு ஆக்கினப் படுத்துறானுகளாம் எண்டு சொல்லுறாரு… தாங்க ஒண்ணாதாம்… அவரு எல்லாத்தெயும் விட்டுட்டு அவங்கட அண்ணாச்சிட கடயில போயி நிக்கப் போறாராம் எண்டு நேத்து அழுதாரு… படிப்பு முக்கியந்தானே பல்லக்கடிச்சிட்டுப் படி மனே எண்டுதான் நாம சொல்லியிரிக்கம்…’ (குறிப்பு: ‘கிளி’ என்பது வயது முதிர்ந்தவர்களால் வாஞ்சையுடன் தம்மிலும் இளையவர்களை அழைக்கும்போது பயன்படுத்தப்படும் மட்டக்களப்புத் தமிழ் வார்த்தைப் பிரயோகம். ‘மனே’ என்பது மகனே அன்பதன் மருவிய வடிவமாக மட்டக்களப்புத் தமிழில் பயன்படுத்தப்படும். ‘ஒண்ணாது’ = மட்டக்களப்புத் தமிழில் முடியாது எனப் பொருள்படும்).
இவ்வாறாக ஆச்சி தன் கதைப்பெட்டியை அவிட்டு விட்டது.
“மெய்யாவா? சரியாக் கஸ்டப்படுத்துறானுகாளா”? – இது நான்…
‘ஓம் மனே, இந்தக் கெம்பஸ் முந்தி வந்தாறுமூல மாவித்தியாலயமாத்தானே இருந்திச்சு. அப்ப எண்டா என்ன அளகான பள்ளியது! இப்ப கெம்பசா மாத்திப் போட்டானுகள். பேரன் சொல்லுறாரு படிப்பும் பெரிசா சொல்லுறமாதிரி இல்லயாம்… பாரன், சுத்திவழச்சி மதிலெல்லாம் கிறுக்கி வெச்சிரிக்கானுகள்… படுபாவிகள்! கொள்ளையில போவானுகள் நல்ல ஒரு பள்ளிய (அதாவது பாடசாலை) எலுவா பழுதாக்கிப் போட்டானுகள்! கெம்பசாக்கிறத்துக்குப் பதிலா மாவித்தியாலமாயே இருந்திருக்கல்லாம்… என்ட மூத்த மச்சினன் மாவித்தியாலத்தில படிச்சித்தான் பிரிஞ்சிப்பலா வந்தவரு! என்ன மாதிரிப் பள்ளி அது… கொள்ளையில போவானுகள் செய்யுற அனியாயம் எண்டா கொஞ்சமில்ல! கெம்பஸ் வாத்திமாருக்கு மதியில்லயா? புதுப்புள்ளகளப் போட்டு சித்திரவத செய்யுறதப் பாத்துட்டு சும்மா இரிக்கானுகள்… நாமளும் கஸ்டப்பட்டுத்தானே அதுகள படிக்க வெக்கிறம்… கூத்தாடயும் மறுகாக் குடிச்சிக் கெடயும் இல்லத்தானே’! (குறிப்புக்கள்: ‘எலுவா’ என்பது மட்டக்களப்புப் பேச்சுவழக்கில் ‘அல்லவா’ என்பதற்குப்பதிலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. ‘மறுகா’ என்பது பழந்தமிழ் வழிவந்து மட்டக்களப்பில் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை – இது ‘அப்புறம்’ அல்லது ‘மேலும்’ என்கின்ற தொனியில் பயன்படுத்தப்பட்டு வரும்).
மட்டக்களப்புத் தமிழின் பிரத்தியேகமான ‘இழுவன்னா’வுடன் இவ்வாறு ஆச்சி தொடர்ந்தும் அடுக்கிக் கொண்டு போனது. வெயிலிலும் மழையிலும் அயராது உழைத்து முதிர்ந்த பழுத்த அனுபவத்தின் மூலத்திலிருந்தெழுந்த உண்மைக் கருத்துக்கள்! ஆச்சிக்குத் தன் கருத்துக்களை சொல்வதற்கு எந்தவிதமான தடையுமில்லை, ஆச்சியின் ஓட்டைவாய்க்கு எந்தக்கொம்பனும் எந்தவிதமான கட்டுப்பாடும் போட முடியாது… தனது பேரனினதும் தனது பிரதேச அனுபவத்தினதும் அடிப்படையில் கருத்துக்களை லாகவமாக எடுத்துச் சொல்லி வசைபாடிவிட்டது. இதைவிட அசைவமான முறையில் கினாப் பானாவை எவராலுமே சாட முடியாது.
தூஷணவார்த்தைகளால் திட்டி எத்தனை கோடி மொட்டைக் கடிதங்கள் எழுதினாலும்… ‘கொள்ளையில போவானுகள் செய்யுற அனியாயம் எண்டா கொஞ்சமில்ல! கெம்பஸ் வாத்திமாருக்கு மதியில்லயா?’ – என்கின்ற பாமரக் கருவாச்சியின் (அஃதாவது, கருவாடு விற்கும் ஆச்சியின்) சொற்களின் காத்திரமோ அமிலத்தன்மையோ வந்து சேராது. அது நிச்சயம்! மேலும், நல்லவொரு பள்ளிக்கூடத்தை பல்கலைக்கழகமாக மாற்றிப் பாழடித்துவிட்டார்கள் என்கின்ற தொனிப்பொருளில் ஆச்சியால் கூறப்பட்ட கருத்தின் பின்னால் கினாப் பானா என்கின்ற உயர் கல்வி நிறுவகத்தின் முகாமைத்துவ மற்றும் திட்டமிடல் செயற்பாடுகள் தொடர்பான அதி மட்டப் பாமர மக்களின் காத்திரமான ஐயப்பாடுகள் வெளிக்கொணரப்படுகின்றன.
உண்மையிலேயே மதிகெட்டுத்தான் கினாப் பானா இன்றும் நடக்கின்றது, நடத்தப்படுகின்றது. கல்விக் கூடம் கல்விக்களமாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் சாக்கடையாகவோ, அதிகார மோகம் கொண்ட முதலைகள் பதவிப் போட்டியிடும் அசிங்கமான போர்க்களமாகவோ மாறக்கூடாது… கோமாளித்தனமான ‘யார் பெரியவர்’ என்கின்ற வகையில் நடக்கும் இழுபறிகளால் கினாப் பானா இழந்தது அதிகம்…
அப்படியான கோமாளித்தனத்துக்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்…
2008ம் ஆண்டில் மட்டக்களப்பில் சூழல் முகாமைத்துவம் தொடர்பான மாவட்ட ரீதியிலான செயலமர்வொன்று நடந்தது. அரச மற்றும் அரச-சார்பற்ற திணைக்களங்களினதும் நிறுவகங்களினதும் பிரதிநிதிகள் பாரிய அளவில் பங்கு கொண்ட நிகழ்வு அது. கினாப் பானாவிலிருந்தும் சிலர் (கோமாளிகள்?) சென்றிருந்தனர். மட்டக்களப்பின் வடபுலமான கடனீரேரியொன்றின் அபிவிருத்தி சம்பந்தமாகப் பல விடயங்கள் ஆயப்பட்டன. குறிப்பிட்ட கடனீரேரியில், கடலுக்கண்மித்ததாகத் துறைமுகம் ஒன்றினை நிறுவலாம் என ஒரு அரச அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி முன்மொழிந்தார். ‘அவ்வாறு செய்வது சரியா, பிழையா?’ எனக் காரசாரமான விவாதம் தொடர்ந்தது. அனைவரும் விவாதத்தில் ஆக்ரோஷமாகப் பங்குபெற்றனர், கினாப் பானாவின் பிரதிநிதிகளைத் தவிர… கினாப் பானாவினர் மயக்கும் மோனச் சிரிப்புக்களுடன் (செயலமர்வில் வழங்கப்பட்ட) மசால் வடையுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்தனர்.
‘சேர், நீங்க என்ன சொல்லப் போறீங்க?’ எனச் செயலமர்வினை நடாத்திய அதிகாரி கினாப் பானாக் குழுவின் தலைவராக வந்திருந்தவரிடம் கேட்டார். அவர் அப்படிக் கேட்டிருக்காமல் விட்டிருக்கலாம். இக்கேள்வி கேட்டிருக்கப்படாவிடின் கினாப் பானாவின் மானம் கப்பலேறுவது அன்று சற்றுத் தாமதமாகியிருக்கும் அல்லது நடந்திருக்க மாட்டாது. கினாப் பானாவின் கால கஷ்டம் – கேட்கப்படக் கூடாத கேள்வி கேட்கப்பட்டுவிட்டது.
துள்ளிக் குதித்த படி, இக்கேள்விக்கு கினாப் பானாவின் பிரதிநிதிகளின் தலைவர் உடன் வழங்கிய பதில்…
“நீங்க எல்லாரும் கதைச்சிப் பேசி உங்கட முடிவுகள எங்களிட்டச் சொல்லுங்க – மறுகா நாங்க அறிவிஜீவிகளெல்லாம் உங்கட முடிவுகள அலசியாராஞ்சி திட்டவட்டமா ஒரு கடசி முடிவச் சொல்லுறம், அத நீங்க நடமுறப் படுத்துனாச் சரி…” இதுவல்லவா அதிசாணக்கியத்தனமானதும் அறிவார்த்தமானதுமான பதில்! (அல்டிமேட் ஸ்டார் எனக்கூறிப் பிதற்றும் நடிகர் அஜித்குமாரின் படமொன்றில் ‘தல போல வருமா?’, என்று ஒரு பாடலுள்ளது. அந்தவகையில், கினாப் பானாக் பிரதிநிதிக் குழுவின் ‘தல’ போல கோமாளித்தனம் செய்ய வேறு எவருக்கும் இயலுமா, என்ன’?).
குறிப்பிட்ட செயலமர்வு அதி-பிரளயமாகத் தொடங்கி விட்டது. “கினாப் பானாவில் படிப்பிப்பவர்கள் மட்டும் தானா மண்டைக்குள் சரக்குள்ளவர்கள்? அவர்கள் மட்டும் தான் அறிவிஜீவிகள் என்றால் மட்டக்களப்பில் மற்றவர்கள் எல்லாம் அரைஜீவிகளா”? அனைவரும் குழம்பத் தொடங்கினர்.
“விஞ்ஞானம் என்பது மக்களுக்கானது… பல்கலைக்கழகங்களின் தலையாய கடமை பாமரர்கள் தங்கு தடையின்றிப் பயன்படுதுவதற்காக அறிவுக் களஞ்சியங்களை திறந்து விடுதல்…. பல்கலைக்கழகங்கள் சமுதாயத்திற்காகவே இயங்குகின்றன (மாறாக அவற்றுக்காக சமூகம் இயங்குவது இல்லை)…” – இப்படியான ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களையும் விஞ்சிய அரைவேக்காட்டுக் கோமாளித்தனத்தால், ‘தல’யும் அவர்தம் சகபாடிகளும் அன்று கினாப் பானாவின் மானத்தை வெற்றிகரமாகக் கப்பலில் ஏற்றினர். ‘தல’யின் இந்தப் பகிடி இன்றும் (மட்டக்களப்பில்) அரச (மற்றும் அரச சார்பற்ற) திணைக்கள மட்டங்களில் பரவலாகக் குறிப்பிட்டுப் பேசப்படுகின்ற ஒரு வேடிக்கைத்துணுக்காகி விட்டது.
‘தல’ என்று தட்டச்சுச் செய்யும் போதே இரு inverted commaக்களும் எருமை மாட்டின் கொம்பு போல இருப்பதனைக் கவனிக்கவும்… மதியில்லாமல் ஐந்தறிவுத்தனமாக (அஃதாவது சிங்களத்தில் கூறுவதானால் – ‘கொணேக் வாகே’) படித்தவர்கள் கதைக்கக்கூடாது. பட்டமும், பட்டமேற்படிப்பும், கலாநிதித் தகமையும் பெற்றுவிட்டால் கொம்பு முளைத்துவிடுமா என்ன? எவ்வளவு உயரம் சென்றாலும், கால்கள் என்றுமே தரையில் நிற்க வேண்டும். இல்லையெனில், நாம் மற்றவர் பார்வையில் கோமாளிகளாகிவிடுவோம்! (குறிப்பு: சிங்களத்தில் ‘கொணேக் வாகே’ என்பது – முட்டாள் தனமாக மாடுபோல் நடப்பவரைக் கடியப் பயன்படுத்தும் ஒரு அதிசைவத்தனமான வார்த்தைப் பிரயோகம்). பகிடியாகக் கதைப்பது தான் என்நோக்கமெனில், மேலும் பல கினாப் பானா தொடர்பான கோமாளிக் கூத்துக்களைப் பட்டியலிட்டு என்னால் அலச முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில், கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?
வருந்தத் தக்க விடயம் என்னவென்றால் இத்தகைய கோமாளித்தனங்களாலும், அசமந்தப் போக்குக்களாலும், மற்றும் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கான குடுமிப்பிடிக் குழாயடிச் சண்டைகளாலும் கினாப் பானா அளவுகணக்கில்லாமல் தடம்புரண்டுகொண்டிருக்கின்றது என்பதனை (என்றுமே) ஏமாளிகளான “திருவாளர். மட்டக்களப்புப் பொதுசனம்” கண்டும் காணாமல் இருப்பதுதான்.
மட்டக்களப்புத்தனமாக ‘கினாப் பானா அல்லது கொள்ளையில போவானுகள் செஞ்ச அநியாயம்!’, என்று இப்பதிவிற்கு (அஃதாவது, blog entryக்கு) ஏன் நான் தலைப்பிட்டேன் (?) என்பது இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன்.
‘சிறுக்கி சிரிச்சி வந்தா சினாத் தானடோய்’, என்று டப்பாங்ககூத்துத் தனமான சினிமாப் பாடலொன்று இருக்கின்றது. அதேபோல், ‘அறிவு கிறுகிக் குறுகி வந்தா கினாப் பானாடோய்’ என்றோ, ‘பொறுக்கி சிரிச்சு வந்தா கினாப் பானாடோய்’ என்றோ உரக்கப் பாடியபடி டப்பாங்கூத்து ஆடலாம் போல எனக்குத் தோன்றுகிறது. கூத்தாடுவதற்கு, அநாகரிகக் கோமாளிகளுக்கா கினாப் பானாவில் பஞ்சம்? (குறிப்பு: ‘கிறுகி’ என்பது மட்டக்களப்புத் தமிழ் வழக்கில் ‘சுழன்றடித்து’ வருவதனைச் சுட்டும். நான் ‘கிறுகி’யை குழப்பிச் சுழன்றடித்துவருவதான பொருள்பட[வே] மேற்படி பந்தியில் பாவித்துள்ளேன்).
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னமும் கினாப் பானா சாம்பலில் இருந்து எழும் பீஃனிக்ஸ் பறவை போல் உயிர்தெழுந்து உரம்பெற்று உயரச் செல்லும் (கிழக்கிலங்கையையும், ஏன் முழு இலங்கையையுமே மேம்படுத்துவதான உயர் கல்விக்கூடமாக மிளிரும்) என நான் இன்னமும் நம்புகின்றேன். என் போன்ற பல பாமரர்கள் இன்னமும் அப்படித்தான் கினாப் பானவில் குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம் நம்பிக்கைகள் கினாப் பானாவினரால் வீணடிக்கப்பட்டு விடக் கூடாது.
களைகளைக் களைந்து பீடங்களில் தொற்றியிருக்கும் பீடைகளை அழித்துப் புதுமெருகுடன் கினாப் பானா மலரும் நாள் எப்போது? பாமரர்களாகிய நாம் இலவுகாத்த கிளிகளாய்க் காத்திருக்கின்றோம்…
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றுக்கொள்கின்றேன்! பெயித்து வாறனா?